வெள்ளி, 21 டிசம்பர், 2012

அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை


காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.


''ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன. இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.

ஆணின் உறுப்புக்களும் பெண்ணின் உறுப்புக்களும் ஒரே தாமரையில் அமைந்தவாறு சில வகைகள் மட்டும் இருபால் உயிரியாகவும் செயல்படுகிறது. இருபால் உயிரினங்களாக இருப்பவற்றில் தாய் தாமரை பல துண்டுகளாகி சிதறிய பின்னர் அவற்றில் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக மாறி வளரத் தொடங்குகின்றன.

பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது. முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்குப் புழுவாகவே வாழ்ந்து பின்னர் உருமாறி தாமரையாக மலர்கின்றன

வளர்ச்சியடையும்போது நுண்ணிய பச்சைப் பாசிகளையும் சேர்த்துக் கொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும் தாவரங்கள் போன்ற தோற்றத்தையும் தருகின்றன. மேலும் இவை சேர்த்துக் கொண்ட பச்சைப்பாசிகள் ஓரினச் சேர்க்கை நடத்திக் கொண்டு தனது தேவை போக மீத உணவை தாமரைகளுக்கு தானாகவே கொடுத்து விடுகின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் இனம் மட்டுமே கடல் தாமரைகளுக்குள் உயிர் வாழக்கூடியது. இம்மீன்கள் பிடித்துக் கொண்டு வரும் இரைகளையும் தாமரைக்கு கொடுக்கின்றன. பொதுவாக மற்ற மீன்களை லாகவமாகப் பிடித்து விழுங்கும் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை மட்டும் விட்டு விடுகின்றன. துறவி நண்டுகள் எனப்படும் ஒரு வகை நண்டுகள் கடல் தாமரைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து சாப்பிடுகின்றன. வயதாகிவிட்ட கடல் தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைக் கம்பள கடல் தாமரைகளே அதிகமாக காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக